வாழ்க்கைப் பயணத்தில் இன்று ஒரு முக்கியமான நாள். முப்பத்தி ஒன்பது வருடம், மூன்றரை வருடங்கள் பணி செய்து இன்று எல்.ஐ.சி நிறுவனப் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறேன்.
16.07.1986 அன்று பயிற்சி உதவியாளராக பணியில் சேர்ந்து உயர் நிலை உதவியாளராக ஓய்வு பெறுகிறேன். சங்கப்பணி என்ற திசை வழியில் பயணம் அமைந்ததால் பதவி உயர்வுகளை நாடவில்லை. திருமணம் ஆன போது நான் பணியாற்றிக் கொண்டிருந்த நெய்வேலிக்கு என்னால் அவரால் மாறுதல் பெற இயலவில்லை. இருவரும் ஒன்றாக பணியாற்ற வாய்ப்பு இருந்த வேலூருக்கு என்னால் உதவியாளராக மாறுதல் பெற இயலாது. உயர்நிலை உதவியாளராக பதவி உயர்வு பெற்றால்தான் சாத்தியம் என்பதால் அந்த பதவி உயர்வு பெற்றேன். என் மனைவி ஏன் நெய்வேலி வர வேண்டும்? நான் ஏன் அவர் பணியாற்றிய கும்பகோணத்திற்கு சென்றிருக்கக் கூடாது> இந்த சிந்தனை நீண்ட காலத்திற்கு பிறகே வந்தது. ஆணாதிக்க் சிந்தனையின் வெளிப்பாடுதான் மனைவியை மாறுதல் நாட வைத்தது என சுய விமர்சனமாக ஏற்றுக் கொள்கிறேன்.
எல்.ஐ.சி பணி மூலம் என்ன பெற்றேன்?
மிக முக்கியமானது சமூக அந்தஸ்து. கல்லூரி தேர்வு முடிவு வந்த ஆறாவது மாதத்திலேயே வேலையில் சேர்ந்து விட்டேன். பார்வைகளே சொன்னது வித்தியாசத்தை. வேலைக்கு செல்பவன் என்று கிடைக்கும் மரியாதையை விட எல்.ஐ.சி வேலை எனும் போது ஒரு படி மேலேதான்.
பொருளாதார தன்னிறைவு என்பது பொருளாதார வளம் என்ற அளவிற்கு முன்னேற்றம் கிடைத்தது. ஓய்வு பெற்ற பிறகும் வாழ்க்கையை எடுத்துச் செல்லும் வாய்ப்பை, நம்பிக்கையை எல்.ஐ.சி அளித்துள்ளது.
முன்பெல்லாம் பல நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் பற்றி மகாத்மா காந்தி சொன்னதை எழுதி வைத்திருப்பார்கள். அதை வாசகமாக பார்க்காமல் வாழ்க்கை முறையாக பார்க்கும் ஊழியர்களைக் கொண்ட நிறுவனம் எல்.ஐ.சி. இங்கே கற்றுக் கொண்ட பொறுப்புணர்வு வாழ்க்கைக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
எல்.ஐ.சி எனக்குக் கொடுத்த மிகப் பெரிய வாய்ப்பு எல்.ஐ.சி க்கு முன்பே தோன்றி எல்.ஐ.சி தோன்ற காரணமாக இருந்த எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.
எல்.ஐ.சி பற்றி நான் முன்னர் சொன்னது அனைத்தின் பின்னணியிலும் எங்கள் ஏ.ஐ.ஐ.இ.ஏ உள்ளது. அதைப் பற்றி பிறகு பார்ப்போம். இனி அவசரம் அவசரமாக ஓடி பத்து மணிக்கு ரேகை வைக்க அவசியம் கிடையாதல்லவா!
இன்று நான் பெற்ற எல்லாமே பொருளாதார வளம், ஞாஅம், மிகப் பெரும் அனுபவம், புரிதல், தோழர்கள் பட்டாளம் என எல்லாமே எங்கள் சங்கம் தந்ததுதான். எந்த சவாலாக இருந்தாலும் சந்திக்கும் உறுதியும் கூட.
02.05.2025 அன்று நடந்த மோசமான சாலை விபத்தில் இரண்டு இடங்களில் எலும்பு முறிந்து அறுவை சிகிச்சைநடந்த வேளையில் இந்த நாளில் பணியில் மீண்டும் சேர்ந்து ஓய்வு பெறுவேனா அல்லது ஸ்டெர்ச்சர் அல்லது வீக் சேரில் கடைசி நாள் மட்டும் வந்து செல்வேனா என்ற கேள்வி இருந்தது.
கடந்த மாதமே பணியில் இணைய முடிந்ததென்றால் அதற்கு சங்கம் ஊட்டி வளர்த்த உறுதிதான் காரணம்.
இரண்டாவது இன்னிங்ஸில் என்ன செய்யப் போகிறேன்.
களத்திற்குச் செல்ல உடல்நிலை உடனடியாக அனுமதிக்காது. அதனால் நிலுவையில் உள்ள எழுத்துப் பணிகளுக்கு முன்னுரிமை.
இங்கே வந்து போகும் நேரமும் அதிகமாகும், இயல்பாகவே . . .